Archive | February 2011

வைதேகி-காத்திருந்தாள்-1

பதிவிட ஆரம்பித்த நாளில் இருந்து ஒரு கதை எழுத வேண்டும் என்ற துடிப்பு இருந்து வந்தது. சந்தர்ப்பம் அமையவில்லை. கதைகள் படிக்கிற பழக்கமும் இல்லாத காரணத்தால் எழுத ஆரம்பிக்க ஒரு தயக்கம். இருப்பினும் நான் எழுதுவதை ரசிக்க பலர் இருக்கிற தைரியத்தில் ஒரு சிறிய படைப்பு(படைப்பு என்றதும் என்னை பிரம்மா கோபித்துக் கொள்வார்). பலரது வாழ்க்கையிலும் வந்து போகும் விஷயம் தான் இந்தக் கதையும். முற்றிலும் என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்று சொல்லி விட முடியாது. ஆனாலும் எனது வாழ்வின் பல சில சுவாரசியம் இதில் மறைந்து இருக்கும் என்பதில் எழுத ஆரம்பித்த ஐந்து நிமிடத்தில் உணர்ந்தேன்.

முதல் அத்தியாயம்

வெகு நாட்களாகவே வைதேகிக்குள் ஒரு சிறு தவிப்பு. என்ன செய்யபோகிறோம் என்ற கவலையில் ஆழ்ந்திருந்தாள். பல ஆண்டுகளாக எப்போதோ ஒருமுறைத் தோன்றும் கவலை. ஆனால் இப்போது எல்லா நேரத்திலும் அவள் மனதில் குடிக்கொண்டுவிட்டது.

வைதேகி நல்ல அழகி, நல்ல நிறம், சுமாரான உயரம், படித்தவள், உத்தியோகத்தில் இருப்பவள். (கற்பனையில் கூட ஒரு பெண்ணை அழகி என்று கூற மனம் வரமாட்டேன் என்கிறதே). சிட்டு குருவிக்கு என்ன கட்டுபாடு என்று இந்த பறந்த உலகில் தன் மனம் போன போக்கில் சென்று வருபவள்.

கேள்விக் கேட்க யாரும் இல்லை…அவள் அனாதை இல்லை. பெற்றவள், உடன் பிறந்தோர், உற்றார், உறவினர் என்று ஏகத்துக்கும் மக்கள் அவளைச் சுற்றி உள்ளனர். மகளின் சந்தோசத்திற்கு எப்போதும் எதிலும் குறுக்கே நிற்காத பெற்றோர்கள். தாங்கள் கொடுத்து இருக்கும் சுதந்திரத்தை தங்கள் மகள் எப்போதும் தவறாக பயன் படுத்திடமாட்டாள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லாதவர்கள். அத்தனை நம்பிக்கை தன் புதல்வியின் மீது. அவளும் இதுவரை அவளது சுதந்திரத்தை தவறாக பயன் படுத்தவில்லை, இனிமேலும் செய்ய மாட்டாள்.

வைதேகி வசந்ததிற்காக(வசந்திற்காக இல்லை) காத்திருக்கிறாள் என்றால் அவளாலயே நம்ப முடியவில்லை. மாற்றங்கள் இல்லாதது என்று எதுவுமே இல்லையே. மாற்றாங்கள் மட்டுமே வாழ்க்கையில் நிரந்தரம்.

ஆம் இந்த வைதேகியின் கதையும் விரல் கொண்டு மீட்டாமல் இருக்கின்ற வீணை போல தான்.

வைதேகியின் வயது நாற்பதை தொடுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் இப்படி ஒரு கவலை தேவையானது தானா என்று தனக்குள்ளேயே கேள்வி கனைகளைத் தொடுத்தாள். அவளை அழகான பெண் என்றால் மிகவும் நவ நாகரிக மங்கையாக கற்பனை வேண்டாம். அதற்காக அவள் ஒரு கிரமத்து பைங்கிளியும் அல்ல. அவளின் அழகிற்காக அதிகமாக அக்கறைகூட எடுத்துக் கொண்டதாக தெரிவதில்லை. புருவத்தினை எப்போதாவது அழகிற்காக தீட்டுவதோடு சரி. நீண்ட கருப்பான முடியை அழகாக தலை விரித்து அவள் நடந்தால் அந்த கூந்தல் அழகிற்கே சொக்கி விடலாம் என்று காத்திருப்போர் ஏராளம்.

காலக் கேடு என்று எதுவும் இல்லாமல் இருந்து இருந்தால், எல்லாம் ஒழுங்காக நடந்திருந்தால் இன்று தன் பிள்ளைகளின் சுதந்திரம் பற்றி யோசித்து இருப்பாளோ. ஆம் குறைந்தது ஒரு மகனோ அல்லது மகளோ இன்று சுமார் 15 வயதிலாவது இருந்து இருக்கும் அவளுக்கு. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு படிக்கும் பிள்ளையின் தாயாக அதனை தயார் செய்து இருப்பாள்.

எங்கே தவறு என்று யோசிக்காமலயே அவளது காலம் ஓடிவிட்டது.

தனது வாழ்க்கை சக்கரத்தை கொஞ்சம் திருப்பி பார்த்திட நினைத்தாள் வைதேகி.

எப்படியான ஒரு இளமை பருவம், எல்லோருக்குமே இனிக்கும் இளமை பருவம் தான் ஆனால் என்னமோ வைதேகிக்கு மனதில் எதுவுமே பசுமையாக இல்லை, இருப்பினும் அவளது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களை நினைத்து பார்த்திடும்போது அவள் அந்தக் காலத்திலேயே இருப்பது போன்ற ஒரு உணர்வு. ஆம் பணி புரிந்திடும் இந்த காலகட்டத்திலும் அவளுக்கு நல்ல நட்புகள் உள்ளது.

நம்ம கோலங்கள் அபி தொல்ஸ் போன்ற பல நட்புக்கள் அவளிடம் உண்டு. (இது வெறும் தோழமை தானுங்கோ ஒரு தலை காதல்கள் இருக்கா என்று வைதேகிக்கு தெரியாது).

பல கதைகளில் வரும் கேவலமான, கீழ்தரமான புத்திக் கொண்ட மனிதர்களை அவள் இதுவரை கானாதது அவள் செய்த புண்ணியமா, இல்லை அவள் சுட்டெறிக்கும் சூரியன் என்பதாலா? இவளிடம் வாலாட்டினால் ஒட்ட நறுக்கிவிடுவால் என்ற அச்சத்தினலோ? எப்படி இருப்பினும் அவள் இதம் தரும் குளிர்ந்த நிலவு என்று இதுவரை ஒருவரும் அறியாததே விந்தையான விஷயம்.

அப்படியே பள்ளி, கல்லூரி காலத்திலிருந்து விடுபட நினைத்தவள், அவளது தாயார் அவளிடம் அவளுடைய திருமணத்திற்க்கு ஒரு வரன் வந்து இருப்பதாகவும், அவர்கள் வீட்டிலிருந்து வரும் ஞாயிறு அன்று பெண் பார்க்க வரபோகிறார்கள். மேலும் தயக்கத்தோடு “ அந்த பையன் இதுவரை 9 பெண்களை பார்த்து வேண்டாம் என்று சொல்லி இருக்கிறானாம்” அவன் அப்படி ஏதாவது சொல்லிவிட்டாள் நீ மனம் கலங்கி விடாதே. இது ஒரு சம்பிரதாய நிமித்தமே, ஆகையால் வந்து பார்த்துவிட்டுப் போகட்டும் என்றாள்.

என்னம்மா எனக்கு இருபது வயது கூட ஆகவில்லையே என்று சொல்லக்கூடத் தோன்றாமல், எல்லாம் தலைவிதி படி நடக்கட்டும் என்று தான் இருந்தாளோ? இல்லை தனக்கு பின் தன் வீட்டில் இருக்கும் உடன் பிறப்புகளை நினைத்தாள். அவர்கள் படிப்பு, திருமணம் என்று வருமே. கூடவே வளர்ந்து வருபவர்க்ள்.. இன்னும் ஒரிரு ஆண்டுகள் இவள் தாமதித்தாள், அவளுக்கு அடுத்த தங்கையும் திருமணத்திற்கு தயாராகி விடுவாள், பெற்றோருக்கு கடினமாகக் கூடம். இருவருக்கும் அடுத்தடுத்து திருமணம் நடத்துவது என்பது நமது நடுத்தர வர்க்கத்திற்கு முடியாத ஒன்றாயிற்றே.

தோல்விகள் பரவாயில்லை, ஆனால் இது அவளை பார்க்க வரும் முதல் வரன். முதல் வரனே பிடிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? முதல் கோனல் முற்றும் கோனலாக மாறிவிடுமோ என்று மன கிலேசத்துடன் இருந்தாள். மனதிற்குள் ஒரு வித கலவரத்தோடு, எப்படி சமாளிப்போம் என்ற எண்ணத்தோடு இருந்தாள். எல்லோருக்கும் இருக்கும் அந்த சந்தோசம், ஆர்வம் என்று எதுவும் இல்லாமல், இது தேவை தானா என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்.,.

பாவம் என்ன தான் நடந்தது என்று பெண் பார்க்கும் படலத்தில் பார்ப்போம்?

தொடரும்

அடுத்த பக்கம் 2

Advertisements

ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன

இது எனது சொந்த அலசல் இல்லை, ஈ மெயிலில் வந்தது,
ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!!
ஒரு சராசரி குடிமகன் பார்வையில் ! ! என்று
நான் படித்தவுடன் பலரும் படிக்க வேண்டும் என்று தோன்றியது.
நண்பர்களே!!!
தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம் , 
அதில்  ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் 
செய்யப்படவேயில்லை  என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். 
ராஜா கைது தான் செய்யப்பட்டாரே  தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை , 
அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக்  காப்போம் என்கிறார் முதல்வர். 
இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய 
காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே  நடந்தது என்ன ?!!! என்பதை 
துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும்  பொறியாளர் அருமையாக ஆய்வு 
செய்து எழுதியுள்ளார் , இது இப்போது இமெயிலில்  வரத்துவங்கிவிட்டது ,
இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல்  சிந்தித்து வாக்களித்து 
நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு  ஃபேஸ்புக் , ஆர்குட் , 
ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.

மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா ? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்( In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நா??் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.

இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன ? போதிய அனுபவம் , வங்கி காசோலை , வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா , ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.
நியாயக் கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் ( LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.
அப்போது 15×0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60×6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30×360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12×10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200   கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.

இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம் , இணைப்பு கட்டணம??…….இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது “INFINITIVE”. நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா ?
மக்களை சென்றடைந்ததா ? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். “Above middle Class” மக்கள் நடுத்தர மக்களாகவும் , நடுத்தர மக்கள் ஏழைகளாகவும் , ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.
ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம் , மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம் , குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்- 1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம் 13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய , மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
துரோகம்- 2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.
துரோகம்- 3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் “swan, Unitech” போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை.

இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு ” S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்- 4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.
துரோகம்- 5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.
துரோகம்- 6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள் , CAG , தொலைதொடர்பு சம்பந்தபட்ட , கைபற்றபட்ட ஆவணங்கள் , சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு , சட்ட , நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு , TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள் , சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.
துரோகம்- 7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.
துரோகம்- 8: நடந்த அனைத்து தேச துரோகங்களும் , குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.
துரோகம்- 9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில் , வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள் , பள்ளிகள் , பாலங்கள் , மருத்துவமனைகள் , தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி , வேலைவாய்ப்பு , அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.
துரோகம்- 10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இ ப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி ? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.
ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.
அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள் , ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை , பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.


எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள் , புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.

நன்றி.

விடுமுறை

டெல்லியிலிருந்து வார விடுமுறைக்கு சென்னை செல்வது என்பது எனது வாடிக்கையான காரணத்தினாலேயே உள்ளூரில் வேளை பார்த்தது போதும் என்று எண்ணியே இந்த அயல் நாட்டு பணியினை முழு மனதோடு ஏற்றுக் கொண்டேன்.

இருப்பினும் இந்த முறை இந்தியா சென்றது எனக்கு ஒரு சிறந்த புத்துணர்ச்சி பயணமாகவே இருந்தது.

மூன்று நாட்கள், சரியாக 72 மணி நேரம் மட்டுமே நான் எனது உறவுகள், நட்புகளோடு உறவாடி மகிழ எடுத்துக் கொண்ட நேரம். போதுமா என்பது பெரிய கேள்விகுறியே, ஆயினும் பணி அலுக்கும் வேளையில் பயணம் என்பது மனதிற்கு மகிழ்ச்சியே.

ஊருக்கு கிளம்ப போகிறேன் என்பது 24 மணி நேரம் முன்பு தான் முடிவானது. ஒரு நாள் விடுமுறை என்பதால் என்னுடைய மேலாளர் விடுப்பு விண்ணப்பத்தை நிராகரிக்கவில்லை போலும். அனுமதி கிடைத்தவுடன் ஏற்பட்ட பரபரப்பு, சந்தோசம் இதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை.

03-02-2011 இரவு 9.45 மணிக்கு சென்னை செல்லும் விமானத்தில் பயணச்சீட்டு பதிவு செய்தபின் அம்மாவிடம் சென்னைக்கு வருகிறேன் என்று அறிவித்தேன்.

03-02-2011 அன்று எனக்கு வேலையே ஓடவில்லை என்று பொய் சொல்ல நினைத்தேன் ஆனாலும் அலுவலகத்தில் ஏதோ சிறு பிரச்சனையால் இனைய வழி வேலைகள் அனைத்தும் முடங்கி போயின. அதனால் அன்று பரபரப்பு எதுவும் இன்றி, நிதானமாக சென்னை பயணத்துக்கு ஆயத்தமானேன்.

விமான நிலையத்தை அடைந்த போது மணி ஏழானது. 9.45 மணிக்கு பயணம் என்பதால் சரியாக இருக்கும் என்று அங்கு இருக்கும் நியமங்களை முடித்து உள்ளே சென்றேன். என்ன கொடுமை இது, பயண நேரம் நெருங்கிறது, ஆனாலும் இன்னும் விமானத்திற்குள் செல்லும் அறிவிப்பு வரவே இல்லை. நாங்களாக சென்று கேட்டபின், அங்கு பணி புரியும் பெண் விமானத்தில் ஏதோ கோளாறு இருப்பதாகவும் மாற்று விமானத்தில் எங்களை அனுப்புவதாகவும் கூறினாள்.

சற்று நேரத்தில் மாற்று விமானத்திற்குள் நாங்கள் அனுமதிக்கப் பட்டோம். இரண்டு மணி நேர தாமதத்திற்கு பின் சென்னையில் தரை இறங்கியது. 72 மணி நேரத்தில், 3 மணி நேரம் விமானத்திலும், விமான நிலையத்திலேயே சென்றது. இன்னும் 69 மணி நேரத்தில் திரும்ப வேண்டுமே என்ற எண்ணத்துடன் எனது வாகன ஓட்டுனரை அழைத்துச் செல்ல வருமாறு கூறிவிட்டு வெளியில் வந்தேன்.

வீட்டிற்குச் சென்றேன் அன்னையின் ஃபில்டர் காபியுடன் நாள் ஆரம்பித்தது. அறை மணி நேரத்தில் அக்கம்பக்கம் வீடுகளில் இருப்பவர்களுக்கு நான் வந்தது தெரிந்தது.

பரஸ்பரம் குசலம் விசாரித்து, அடுத்த வீட்டிலிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு சகோதரியின் பிள்ளைகளைக் காண்பதற்குச் சென்றேன். வீட்டு வாசலிலேயே நின்று என்னை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான் மகன் ராகுல். மகளோ என்னுடனையே கிளம்ப ஆயத்தமானாள்.

மகளை ஏமாற்றி விட்டு என் வீட்டிற்கு வந்தேன். வந்த சிறிது நேரத்தில் காலை சிற்றுண்டி முடித்து, எனது தங்கையுடன் என் புது வீட்டினை காண சென்றேன். ஓரளவுக்கு முடியும் தருவாயில் உள்ளது.

நண்பர்களுடன் அரட்டை, மதிய சாப்பாடு என்று இப்படியே ஒரு நாள் பொழுது சென்றது.

சாமி என்னுடைய நண்பர் புது வீடு வாங்கியதற்காக எங்களுக்கு ஒரு இரவு விருந்து தர வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம். அதுவும் அவர் நான் ஊரில் இல்லாத காரணத்தினால் யாருக்கும் தரவில்லை என்று சொல்லிய காரணத்தினால் வெள்ளிக் கிழமை அன்று இரவே சென்றோம்.

இரவு சாப்பாடு முடித்து பிள்ளைகளை சகோதரியின் வீட்டில் விட்டு வந்தேன். சிறிது நேரம் என் தாயுடன் சீட்டாட்டம் ஆடிய பின் உறங்கச் சென்ற போது மணி சனிகிழமை காலை 1.00.

சனிகிழமை பொழுதும் பிள்ளைகள், நட்புகள் என்றே ஓடியது. இரவு எனது தாயார் மதுரைக்கு தனது தோழியின் மகனது திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்றார், நானும் ஊரிலிருந்து வந்த காரணத்தினால் சிறிது தயங்க, தங்கைகள் போக வேண்டாம் என்று சொல்ல, வேறு வழியில்லை எங்கள் வீட்டின் அனைத்து விசேஷங்களுக்கும் வந்தவர் என்பதால் போகச் சொன்னேன்.

அவர் செல்லும் முன்னரே எனது சகோதரிகளின் கணவர்களும் சினிமாவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். எங்கள் செல்ல மகன் விஜயின் தீவிர ரசிகனாகி போனதால் எல்லோரும் காவலன் படம் போவது என்று தீர்மானித்தோம்.

அந்த திரை அரங்கம் புதுப்பிக்கபட்ட திரை அரங்கம். திரை அரங்கம் சென்றோம், நுழைவுச் சீட்டு வாங்கினோம். வெறும் ரூ.10க்கு சினிமா பார்த்து இருக்கிறோம். இப்போது ரூ.120 என்றார்கள். புதுசு அதான் மவுசு. திரை அரங்கினுள் சென்றோம். திரை அரங்கம் ஒரளவுக்கு நிரம்பி இருந்தது. பரவயில்லையே விஜய் படத்துக்கு இத்தனை நாள் கழித்து இத்தனைக் கூட்டம் என்று எண்ணிய வேளையில், திரைபடம் துவங்கியது. திரை வெறித்தோம், மிரண்டோம் என்றே சொல்ல வேண்டும். ஆம் திகில் படம் போல திரை அரங்க இருட்டு, மேலும் திரையிலும் இருட்டு, படம் பெயர் தூங்கா நகரம் என்றதைப் படித்ததும், தூக்கி வாரி போட்டது.

ஆம் சிறு பிள்ளைகளை அழைத்து வந்து விட்டோமே, இதன் விமர்சனம்கூட படிக்க வில்லையே. திகில் படமாக இருக்குமோ என்று பயந்து போனோம்.

மதுரையின் மற்றொரு பெயர் தான் தூங்கா நகரம். தூங்கா நகரம் எங்களை தூங்காமல் படம் பார்க்க வைத்தது.

சனிக்கிழமை பொழுதும் முடிந்தது, ஞாயிறு விடியற்காலை தூங்க சென்றேன். அம்மா இல்லாமல் கொஞ்சம் சிரம்மாகவே இருந்தது. சீட்டு விளையாடமல் தூங்க வேண்டுமே.

ஞாயிறு காலை என்னுடைய தோழியை காண வேண்டும் என்று திட்டம். ஆகையால் எழுந்தது எட்டு மணி, அம்மா இல்லாத காரணத்தால் மாடியில் என் மாமா போட்டுக் கொடுத்த சுவையான ஃபில்டர் காபி குடித்தவுடன், தோழியை அலைபேசியில் அழைத்தேன், இன்னும் ஒரு மணி நேரத்தில் வருகிறேன் என்று கூறி மாமாவுடன் ஒன்றரை மணி நேரம் கதை அடித்த பின், அலறி அடித்து கிளம்பி, வேறு ஒரு தோழியின் வாகனத்தை எடுத்துக் கொண்டு தோழியின் வீட்டிற்குச் சென்றேன்.

நல்ல மதிய உணவு சாப்பிட்டு, கதை பேசி, அரட்டை அடித்துவிட்டு, இருவரும் கிளம்பி என் மகன் கேட்ட துணிமணிகளை வாங்குவதற்குச் சென்றோம். பின்னர் அவளுடன் சென்று எனது அடுக்குமாடி குடியிருப்பை காட்டுவதற்காக சென்றேன். பின்னர் அவள் அவளது இல்லத்திற்கு சென்றாள். இப்படியே என்னுடைய மூன்று நாடகளும் சென்றது.

கடைசியாக இன்னும் ஆறு மணி நேரமே உள்ளது. என் பிள்ளைகளோடு கடையிலிருந்து வாங்கி வந்த துணிகளை காண்பித்து அவர்களின் சந்தோசத்தில் திளைத்து பின்னர் ஒரு வழியாக இருவரிடமும் நான் திரும்ப செல்கிறேன் என்று கூறி சமாதானம் செய்து அவர்களை வீட்டிற்குச் செல்லுமாறு கூறினேன்.

இன்னும் மூன்று மணி நேரமே உள்ளது, ஊருக்கு செல்லுமுன் கொஞ்சம் இனிப்பு வகைகள் வாங்கிக் கொள்ள கடைக்கு என்னுடைய அத்தை மகனுடன் சென்றேன்.

பின்னர் வந்து சிறிது நண்பர்களோடு உறையாடிவிட்டு, கிளம்புவதற்கு ஆயத்தமானேன். இன்னும் பத்து நிமிடத்தில் சென்னை விமான நிலையத்திற்குள் செல்ல வேண்டும். மனது இந்த 70 மணி நேரத்தை அசை போட துவங்கியது. ஆஹா என்ன ஒரு அருமையான விடுமுறைக் கொண்டாட்டம்.

மனது அடுத்த வாரம் வரும் மூன்று நாட்கள் விடுமுறைக்கு ஏங்குகிறது.

போராட்டம்


எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்,

இந்த நாட்டிலே

நம் நாட்டிலே

சொந்த நாட்டிலே ! ! !

நல்ல கருத்தான பாடல் தான். சிந்திக்கும் திரனை சுத்தமாக இழந்துவிட்ட நம் இந்திய பிரஜைகளுக்கு என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் எது சொன்னாலும் புரியாது. இருந்தாலும் ஒரு பொறுப்பான இந்திய பிரஜையாக நான் சொல்ல விரும்புவதை சொல்ல எனக்கு முழு சுதந்திரம் மட்டுமே உள்ளதால் அந்த சுதந்திரத்தை சுவாசிக்க செய்யும் ஒரு சிறு முயற்சி செய்கிறேன்.

நம்மை இலவசங்களுக்கு அடிமையாக்கி, இல்லாதோர் ஆக்கி கீழே தள்ளி அதில் இனிமை காணுகிறது ஒர் எருமை கூட்டம். ஆம் இலவசங்களால் நமக்கு நன்மையோ இல்லையோ அதை கொடுப்பதால் பல மந்திரிகளுக்கு நன்மை.

யாருடைய பணத்தில் இந்த இலவசங்கள் வழங்கபடுகிறது என்று கொஞ்சம் யோசித்தால் தானே தெரியும். நமக்கு தான் சிந்தனை திரனை செயலிழக்க வைத்துவிடுகிறார்களே.

இலவசங்கள் பின்னால் செல்லும்வரை இந்தியரை யாரும் காக்க முடியாது. எப்படியோ போய்த் தொலையுங்கள் என்று என்னால் இருக்க முடியவில்லை, காரணம் நானும் என்னைச் சார்ந்தவர்களும், வரிகளை செலுத்துகிறோமே. எந்த வரி இல்லை இந்த திரு நாட்டில்? ஏன் இவர்களால் இலவசங்களை கொடுக்க முடியாது.

தொலைக்காட்சி பெட்டி, காஸ் அடுப்பு என்று இந்த மாதிரி இலவசங்களை அள்ளி தருவோர்களால் ஒரு ரூபாய்க்கு அரிசி தர முடிந்தது.

ரேஷன் கடைகளில் அரிசியின் விலை ரூ.1, ஆனால் மற்ற கடைகளில் ரூ.20 – ரூ.45 வரை.

விலையேற்றம் என்பது அன்றாடம் வாழ்வில் ஏற்படுகிறதே, இதனை தடுக்க வழி உண்டா என்று யோசிக்காமல், இப்போது வரப்போகும் தேர்தலுக்கு என்ன இலவசம் தரலாம் என்று யோசிக்க ஆரம்பித்து இருப்பார்கள்.

இந்த இலவசங்களை தவிர்த்து அடுத்த ஐந்து ஆண்டுகள் பெட்ரோல், டீசல், மற்றும் காஸ் விலைகளை உயர்த்த மாட்டோம் என்று வாக்கு கொடுப்பீர்களா?

திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று தெரிந்து எழுதினாரோ இல்லை வார்த்தை ஜாலமாக எழுதினாரோ தெரியவில்லை, ஆனால் இந்த இலவசங்கள் எங்களுக்கு வேண்டாம் என்று யாரோ ஒரே ஒரு விவசாயி சொன்னதாக ஒரு மின் அஞ்சல் வந்தது மட்டுமே நினைவில் உள்ளது.

இங்கு திருடர்கள் திருந்த வேண்டாம், அவர்களை திருடர்களாக மாற்றுவோர் நாம் தானே. மக்களாகிய நாம் திருந்தினால் மட்டுமே மாற்றங்கள் நேரலாம். ஆம் போன தேர்தலில் அவங்க ஒன்றும் செய்யலை, இந்த தேர்தல் இவர் வரட்டும் ஏதாவது செய்வார் என்று எதிர் பார்க்கிறோம், ஆட்சிக்கு வருமுன் காலில் விழுந்தவர், ஆட்சிக்கு பின் தொகுதி பக்கம் வருவதேயில்லை. தப்பி தவறி வந்தால் காரிலிருந்து இறங்குவது இல்லை.

மக்களின் நலனுக்காக மக்களால் தேர்ந்து எடுக்க படுவது ஜனநாயகம். சுய நலனுக்காகவே அரசியல் நடத்தும் நயவஞ்சகர்கள் இருக்கும் வரை, நாங்கள் யாரையும் தேர்ந்து எடுக்க மாட்டோம் என்று இந்த தேர்தல்களை ஒதுக்குவோம்.

இன்றைய தேதியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்களுக்கு நன்மை என்பது சிறிதும் கிடையாது.

ஒரு வழியாக 18 நாளாக நடந்த எகிப்தின் கிளர்ச்சி ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு நிம்மதி அளித்தது.

எப்போதுமே வாழ்க்கை போராட்டமாகும் நம்முள் மாற்றங்கள் இல்லாதவரை.

எங்களின் தேசத்திற்கு விடிவு காலம் எப்போது வருமோ? கண்டிப்பாக கிளார்ச்சிகளால் ஏற்படாது. இந்திய தாயே உன்னை காக்க மேலும் ஒரு மகாத்மாவை நீ பெற்றிட வேண்டும்.


எனக்காக என்று நீ கேட்டாயே

கனவுகள் மெய்பட வேண்டும் ! ! ! காதல் என்பது எதுவரை ! ! !

காதல், காதல், காதல்

அந்த காதல் போயின்

சாதல் சாதல் சாதல்

என்றார் முண்டாசு கவி பாரதி.
”காதல் செய்வீர் உலகத்தீரே”  என்று உலகத்தில் உள்ள அனைவரையும் காதல் செய்ய சொன்னார்.

காதல் என்பது எதுவரை, கல்யாண காலம் வரும் வரை தானா?

ஆயிரம் கேள்விகள் இருந்தது என்னுள்.

காதல் இனிமையானதா, மென்மையானதா, காதல் என்பது ஒரு மாயை, பொல்லாதது என்று பல முறை பலரிடம் தர்க்கம் செய்துள்ளேன். அதன் பொருள் புரியும் வரை – காதல் என்பது என்னை நெருங்காதவரை.

காதல் என்பது தான் என்ன? காதல் என்பது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே ஏற்படும் வெறும் ஈர்ப்பு தானா? இல்லை அதற்கும் மேலும் எதாவது உண்டா?
காதல் என்பது ஒரு உணர்வா, இல்லை நினைவா? ஒருவராக நினைத்தால் அது நினைவாகும், இருவரும் பகிர்ந்தால் அது ஒரு இனிமையான உணர்வே.

காதல் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக வரும் ஒரு அத்தியாயம். திருமணத்திற்கு முன்னரோ அல்லது திருமணத்திற்கு பின்னரோ கண்டிப்பாக வந்தே தீரும். (வந்தால் தீருமா?)

என்னுள்ளும் காதல் வந்தது. மெதுவாக என்னுள் காதல் வந்தது. ஒரே நொடியில் காதல் வந்தது என்று சொல்ல மாட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக செதுக்காமல் ஆனால் சடாரென்று வந்தது. எப்படி, எப்போது, யாரால் என்று பின் ஒரு பதிவில் பார்ப்போம்.

இளமையில் காதல் வந்தால் எது வரைக்கு வரும் என்று யோசித்ததனால் அப்போது வரவில்லை. முதுமைவரை வேண்டும் என்பதால் ஒரு முழுமையான காதலைத் தேடி அலைந்தேன்.

உன்னை கண்டவுடன் என் காதலை சொல்லிட வார்த்தைகளை தேடினேன், அது என்னவோ புரியாமல், உணராமல் சொல்வதால் இது முழுமையாக உணராத காதல்.
உன்னை என் கண்களால் கண்டபின் என் காதலை உன்னிடம் சொல்லிட நினைத்தேன், ஆனால் என்னுள் இருக்கும் எண்ணங்களை நீ இன்றே தெரிந்துக் கொள்ள விரும்பிய காரணத்தால் மட்டுமே இந்த பதிவு.

என்னுடைய காதலை ஒரு வரியில் சொல்ல வா – நீ அருகே இல்லாமல் என் காதல் ஒரு ஊமை பெண் கானும் கனவு போல தான். உனக்கான என் காதலை மொத்தமாய் தேக்கி வைத்திருக்கிறேன் என்னுள்ளேயே. இப்போது சொல்லிட ஒரு சந்தர்ப்பம் நீயாக கேட்டதினால்.

உன்னுடனான உரையாடலை நினைத்துக் கொண்டே சென்றேன். இரவில் வழிதனில் முழு நிலவு கண்ணில் தோன்றியதே, அதில் என்ன ஆச்சர்யம் என்று கேட்டால் ஒன்றும் இல்லை அன்று நிலவுக்கு விடுமுறை நாள் ஆம் அமாவாசை சந்திரன் முழுவதும் மறைந்திருக்கும் நாளாம் எப்படி என் கண்களில் முழு நிலவு??? அந்த நொடியில் காதல் என்னுள் வந்ததா?

எனக்கான உன்னை பற்றி எழுத வேண்டுமா??

சொல்ல வார்த்தைகள்
பல கோடி உள்ளது, ஆனால்
உனக்கான வார்த்தை
எதுவாக இருக்கும்
என்று எண்ணும் போது,
எதுவும் உனக்கு நிகரில்லையே

நீ என்னை புரிந்துக் கொள்ளாமல் கேட்ட கேள்வி, புரிந்து கொள்ளவே இந்த பதிவு. புரிந்த பின் பிறிவு என்பது நம் காதலில் இல்லை

என் காதல் என்றும் உன்னோடு தான்.

எனக்கான உன்னை உன் கரம் பற்று முன்னரே மனமெல்லாம் சந்தோசம் பொங்க, இவன் எனக்கானவன், என் உயிர் என்றும், என் வாழ்க்கையின் வழி நீ என்றும், என் மகிழ்ச்சியே உன் மகிழ்ச்சி என்றும், உன் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி, எனது சுக துக்கங்களை என்னுடன் பகிர போகும் எனக்கான இவன், எந்த ஒரு நிலையிலும் என்னை கைவிடாதவன் இவன் என்று நினைத்து உள்ளம் பூரித்து அந்த தருணத்திற்காக காத்திருத்தல் என்பது தான் காதலோ??

எந்த நிலையிலும் நம் அன்பு குறையாமல் இருக்குமாயின் அதுவே காதலாகும். இன்று நமக்குள் இருக்கும் அன்பினை போற்றுகிறேன். என்றும் குறையாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

உன் இனிமையான வரவுக்காக காத்திருக்கும்.
உந்தன் காதலியாக இதனை எழுத வேண்டும் என்றால் என் காதலை உன்னிடம் சொல்ல வேண்டுமே. சொன்னால் தான் உனக்கு புரியுமா??? உன்னை பற்றி சொல்ல, என்னுள் இத்துனை மாற்றம் தந்த உன்னை பற்றிச் சொல்ல பக்கங்கள் பல வேண்டும், உன்னால் பல வண்ணங்களாக நம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படட்டும். பின்னர் சொல்லிடலாம் என்று மிச்சம் வைக்கிறேன்.

என் இமைகள்
விழிகளை பாதுகாப்பது போல
என்னை நீ பொக்கிஷமாய்
காத்திடுவாய்.
என் பெயரை நீ சொல்லிடும்
வேளையில்
உன் காதலை
என் மீது நீ கொண்ட
நேசத்தை நான் சுவாசித்தேன்.

உனக்கான என் மனம்


காதல் என்பது எனக்கு காவியமானால்
காவியமாக்க துனையாக நீ வேண்டும் ! !
நீயின்றி என் காதல் கானல் நீரே ! ! !
உனக்குள் இருக்கும் என்னை
புரிந்து கொள், பிறகு
எனக்குள் இருக்கும் உன்னையும்
நீயே புரிந்து கொள்வாய்.

நீ கேட்டால் நான் மாட்டேன் என்று சொல்வேன் என நினைத்தாயோ?
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் சொல்??? உனக்காகவே இது.

இது காதலர் தின பதிவாக இருக்கட்டும்.நீ என்னை துளைத்து எடுத்த காரணத்தினால் இதனை இப்போது இடுகிறேன் இல்லையெனில் இன்னும் பல ஆண்டுகள் கழித்து நம்முடைய பசுமையான நினைவுகளாக எழுதி இருப்பேன்.

Global Warming

பாடமும் படிப்பும்

என்னுடைய படிப்பும் பாடமும்(அனுபவ படிப்பும் பாடமும் தான் சொல்கிறேன்) நிறைய இருந்தாலும், ஏனோ இன்று என்னுடைய மனம் நம்முடைய ஏட்டுக் கல்வியை நினைத்து உறுகியது. ஏதோ தவறு இருப்பதாகவே உணருகிறேன்.

மெல்ல நான படித்தப் பள்ளிக் காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். எப்படி நம்முடைய கல்வி இருக்கிறது என்று. தசரதனுக்கு மூன்று மனைவிகள், நான்கு புத்திரர்கள் என்றும், ராமன் சீதையை மணந்தான், சீதை அயோத்தியில் பிறந்தால் என்றும் படித்ததும், ராவணன் சீதையை கடத்தினான். ராமாயணத்தின் பல அத்தியாயங்களை ஐந்தாம் வகுப்புக்குள் ஒரு சில பக்கங்களில் நாம் படித்திருந்தாலும் என்னமோ இது தேவையா என்று மட்டுமே அதுவும் 10 ஆண்டுகளுக்கு முன்னால் நினைத்து இருக்கிறேன்.

அதில் உள்ள நன்மை தீமைகளை சுட்டிக் காட்டி சொல்லி தருவதில்லையோ? ராமனின் காப்பியம் சீதைக்காகவே இருந்தாலும், அதிலும் சகோதரத்துவம், தாய் தந்தையின் சொல்லுக்கு கீழ்படிதல், மரியாதை என்று எதையும் கற்று தருவதாக தெரியவில்லை.

அடுத்த பாடமாக நினைவில் இருப்பது அசோகர் சாலைகளின் இரு பக்கமும் மரம் நட்டார் என்பது. இன்றைய தேதியில் மிகவும் தேவையான பாடம்.

சாலைகள் இல்லாத, புழுதிகளில் குதிரைகளையும், சாரட்டு வண்டிகளை உபயோகித்த காலத்திலேயே சாலையின் இருபுறமும் மரங்கள் இருந்தன என்பது மிகவும் சந்தோசமான விஷயமாக தோன்றுகிறது.

அசோகர் காலத்தில் நம்ம பேருந்தும்,  இல்லை (பொல்யுஷனும்) சுற்று புற தூய்மை கேடும்  இல்லை, அவரே மரம் நட்டாருன்னா நாம என்ன செய்கிறோம்….

கேவலாமாக புகை அள்ளி விடும் வாகனங்களை பயன் படுத்துவதோடு, சாலைகளை விரிவாக்கும் பணியில் அனைத்து மரங்களையும் வெட்டிச் சாய்க்கிறோம்.

சாலைகளின் இருபுறமும் நிழலுக்கு ஒதுங்குவதற்கு கூட மரங்கள் இருப்பதாக தெரியவில்லை. படித்த மேதவிகளின் மேற்பார்வையில் தான் இந்த மரம் வெட்டும் பணியும், விரிவாக்கும் பணிகளும் நடைபெருகிறது.

அசோகரின் பாடம், படிப்பினையாக எந்த ஆசிரியரும் சொல்வதாக தெரியவில்லை. ஆரம்ப கல்வியே ஏட்டுக் கல்வியாக இருக்கிறதே, எப்படி சரி செய்ய போகிறோம்??

வீட்டிற்கு ஒரு மரம் வளர்போம் என்ற அரசாங்க அறிவிப்புகளை படித்தாக நினைவு, ஆனால் இன்று ஒரு வீடு இருக்கும் இடத்தில் பல அடுக்குமாடி வீடுகள். மரம் எங்கே வைக்கிறது.

இன்றோ நாம், பேருந்துகளும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் அதிகமாக பயன்படுத்தும் காலத்தில் சாலைகளில் மரங்களின்றி பயணம் செய்கிறோம்.

ராஜாக்களுக்கு மிருகங்கள் இளைபாறுவதற்கு மரங்கள் வேண்டும் என்று தோன்றியது, நம் மந்திரிகளுக்கோ, வாகனங்கள் செல்ல தார் சாலைகள் மட்டுமே தேவைபட்டது. மக்களின் தேவைக்கோ இல்லை இயற்கையின் பராமரிப்புக்கோ மரங்கள் தேவை என்று தெரியவில்லை.

இப்படியே போய் கொண்டிருந்தால், கோள வெதும்பல் (global warming) பற்றி பேசியே காலம் கடந்துவிடும் போல இருக்கிறது.

என்ன செய்யலாம் என்று யோசிக்கலானேன்…

கோள வெதும்பல் (global warming) ஒரு மிக பெரிய சாபமாகும், இது ஒரு கடுமையான , மோசமான அச்சுருத்தல் இல்லை, பிரச்சனையாகும். இது எல்லா நாட்டிற்குமே பொருளாதாரம், நாட்டின் பாதுகாப்பு, மற்றும் பொது மக்களின் சுகாதாரம் என்று மிரட்டும் விஷயமாகும்.

இந்த கோள வெதும்பலுக்கான காரணம் என்ன என்று ஆராய்ந்தால், கரியமில வாயு அதிகமாவது தான்.

கரியமில வாயு (carbon-dioxide) நமது வளிமண்டலத்தில் அதிகமாவதால், நிலம் மற்றும் சமுத்திரத்தின் வெப்பநிலையும் அதிகமாகிறது.

வெப்பநிலை அதிகமாவதால் உயிரினம் வாழுமிடம் அபாயகரமாகிறது. வெப்பநிலை அதிகமாவதால் செடி, தாவரம் ஆகியவற்றின் உற்பத்தித்திறன் பாதிக்கபடுகிறது. நிலங்களும் தனது செழுமையை இழந்து மலடுகளாகும்.

ஜீவாதாரமான உணவு உற்பத்தியிலும் இதனால் இழப்பு ஏற்பட போகிறது. இதனால் பொருளாதார சீர்குலைவும், மனித இனம் அழியும் அபாயமும் உள்ளது.

இதற்கான தீர்வு தான் என்ன?

தூய்மையான உலகமே, தூய்மையான சுற்றுபுறச் சூழலே சுகாதரமான வாழ்க்கைக்கு அடிபடையாகும், அதுவே இதற்கு சரியான தீர்வு.

தூய்மையான சுற்றுபுறச் சூழல் எப்படி அமைப்பது ?

இந்த கரியமில வாயுவிற்காக யோசித்தால், மரங்களை வளர்ப்பது மட்டுமே சரியான தீர்வு. மரம் நடுவதற்கே இடமில்லாத சூழ்நிலையில் மரம் வளர்க்க 10-20 ஆண்டுகள் ஆகிவிடுமே அதற்குள், மரங்களாலும் நம்மை காக்க முடியாது.

மக்களால் எளிதாக செய்யகூடியது எவை?

பாலிதின் பைகள் உபயோகத்தை தவிர்ப்பது.

வாகனங்களை பழுது பார்த்து, அதிகமாக புகைக் கக்காமலும், கூடுமானவரை புகை தரக்கூடிய டீசல் வாகனங்களை உபயோக படுத்தாமலும் இருப்பது சால சிறந்தது. வாகனத்தை சரியான முறையில் பராமரிப்பது என்பது சுற்றுபுறச் சூழலுக்கு மட்டுமின்றி, மேலும்

சூரிய சக்தியால் இயங்க கூடிய கார்களும், சாதனங்களும் உபயோக படுத்துதல் சாலச் சிறந்தது.

காகிதங்களை உபயோக படுத்துமுன், ஒரு முறைக்கு பல முறை யோசித்து உபயோகப் படுத்துவதும், தவிர்க்கமுடியாத இடங்களில் மட்டுமே அச்சடிக்கவும் செய்தல்.

மரங்கள் மட்டுமே நமக்கு வரம்களாகும்.

எது செய்தாலும் நன்றாக யோசித்துச் செய்யுங்கள்.

மக்களுக்காக உருகிய ராஜாக்கள் இப்போது இல்லை, தமது மக்களுக்காக (பிள்ளைகளுக்காக) உருகும் ராசாக்களே அதிகமாக உள்ள காரணத்தினால், நமக்காகவும், நமது சந்ததியினருக்காகவும், கோள வெதும்பல் (global warming) என்பதனை நமது கண்டிப்பான கடமையாக, தவிர்க்காமல் செய்ய வேண்டிய கடமையாக நினைத்து நம்மாள் முடிந்தவைகளை செய்து, தேசத்தை மட்டுமல்ல, இந்த உலகையும் காப்போம். நன்றே செய் அதனையும் இன்றே செய் என்று உறுதி கொள்வோம்.

சீற்றத்தில் சீதை

சீற்றத்தில் சீதை

இந்த தலைப்பை எழுத வேறு ஒரு இனையத்திலிருந்து வந்த தாக்கமே காரணம். மிகவும் கேவலமாக சொல்லபட்டது. சொல்ல பட்ட கருத்த்தினை நான் மறுக்கவில்லை. இன்றைய நவநாகரிக பெண்களின் வாழ்க்கையை கூறி இருந்தது.

சிறப்பாக சொல்லும்படி எதுவும் இல்லை என்றாலும், அவர் சொல்லிய விதமோ சொன்ன விஷயமோ என்னை பாதிக்கவில்லை. அவர் கொடுத்திருந்த தலைப்பே என்னை இந்த பதிவிட வைத்தது.

கலியூக சீதைகள் என்ற அவரின் கவிதை பைக்கில் ஊர் சுற்றி திரியும் கல்லூரி பெண்கள், முகங்களை துப்பட்டாவினால் மறைப்பதைப் பற்றி சொல்லியது சற்று சிந்திக்க வைத்தது.

கலியுக சீதைகள் – என்ற தலைப்பில் இருந்த கவிதை

பட்டாய் பறக்கிறது

சிட்டு

பைக்கில்..,

முகம் தெரியாதபடி

துப்பட்டாவை

போர்வையாய்

போர்த்திக்கொண்டு.

இறுக அணைத்தபடி

இளைஞனை!

அருகாமை வாகனத்தில்

கணவனோ, தந்தையோ

தம்பியோ, தங்கையோ

அண்ணனோ யாரறிவார்

அவள் முகமூடி

அவதாரத்தை!

அலைபேசியில் பதியப்பட்டிருக்கிறது

அழகாய்.. பெண் பெயரில்

அவன் பெயர்.

அவள் அழைப்பினில் கூட

அவன் ஏனோ

அவளாகிப்போகிறான்.

அவள் போட்டிருக்கும்

டி சர்ட்டில் வாசகம் சொல்கிறது

IM BITCH (நான் நடத்தை கெட்டவள்)

நவநாகரீக மங்கையவள்!

தாலிக் கட்டிக் கொண்டு

வேலித் தாண்டியவளின்

வார்த்தை

காஸ்மோ கல்ச்சர்

கவலை வேண்டாம்

இதெல்லாம் சகஜம்

காலம் மாறிடுத்து!

நல்ல பதிவாளரின் பதிவாக இருந்திருந்தால் அவரது இனைய முகவரியை கொடுத்து இருப்பேன். அறை குறை, படங்கள் நிறைந்த அந்த இனைய முகவரியை எப்படி இங்கு கொடுப்பது.

சீதைக்கும் இந்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்?

அப்படி சிட்டாய் பறக்கும் பெண்களை பற்றி கவலை படுபவராக இருந்திருந்தால் அந்தக் கேவலமான டி ஷர்ட் படத்தினை போட்டு இருக்க மாட்டார். அடுத்தவரை குறை சொல்லுமுன் உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.

வேலிதாண்டியவள் என்று ஒரு வார்த்தையில் ஈசியாக சொல்லி இருந்தார், எத்தனை கேவலமான எண்ணங்கள், குதர்க்கமான சிந்தனை என்று இருக்கும் இவரது படைப்பினை படித்ததை கேவலமாக நினைக்கிறேன்.

கலியுக சீதைகள் இந்த தலைப்பில் வேறு ஒரு பதிவினை போட்டால் மட்டுமே என் மனம் நிம்மதி பெறும்.