Archive | November 2010

சீரியலும் நானும்

சீரியலும் சீர்கேடுகளும்

என்ன எழுதவது என்று யோசித்த நேரத்தில், தோழி ஒருவரின் பதிவினைப் தற்செயலாக படிக்க நேர்ந்தது. மெகா சீரியல்கள் பார்ப்பவர்களுக்கு சிறப்பு விருது என்றும் அதற்கும் தகுதி சுற்று, கால் இறுதி சுற்று முதல் இறுதி சுற்று வரையும் (இதிலும் வைல்ட் கார்டு சுற்று வருமாம்) என்று அவரது பதிவு ஆரம்பித்த்து…

எண்ணற்றத் தொலைக்காட்சிகள் பெருகிவிட்டதால், மெகா சீரியல்கள் பல ஆண்டுகள் கடந்தாலும் நாம் நம்மை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பதில் சிறுது வருத்தமே. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

புதுதில்லியில் இருந்தவரை தொலைக்காட்சி பார்க்கவே நேரமின்மையால் தொடர்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி என்று இருந்தேன். ஆனால் அது ஒரு காற்புள்ளியாகவே இருந்து இருக்கிறது என்று எனக்கே தெரியாமல் இருந்திருக்கிறேன். இரவு ஒரு மணி நேரம் பழைய பாடல்கள் கேட்டுக் கொண்டே உணவு, நட்புகளுடன் உறையாடல் என இருந்தேன்.

உத்யோக நிமித்தமாக தில்லியைவிட்டு அரபு தேசம் வந்தவுடன், நமக்கு பொழுது போக்கு என்பது நம்முடைய மடிகணனி தான் என்றிருந்தேன். காலக் கோலாறால் என்னைத் தேடி என் அறை வரை சன் தொலைக்காட்சி துரத்தியது. வேலை நேரம் போக சன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தால், நேரம் போவதே(வீணாவதே) தெரியவில்லை.

ஏற்கனவே சில சீரியல்களின் விசுவாசி இப்போது மாலை நேரத்தின் சீரியல்கள் அனைத்தையும் நான் பார்க்காவிட்டால் சன் தொலைக்காட்சி கவிழ்ந்து விடுமே என்ற கவலையில் இந்த மெகா தொடர்களில் என் முழு நேரத்தையும் வீணடிக்கிறேன் என்று நன்றாக தெரிந்தும் அதையே செய்கிறேன்.

இப்போது நேரம் அதிகமாக இருப்பதால் நல்ல முறையில் பல விஷயங்களில் பயன் படுத்தலாம். நல்ல வெயில் காலத்தில் நடை பயிற்சி செய்ய முடியாது ஆகையால் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாயிற்று. சீரியல்கள் பார்ப்பதால் சமைக்கவேண்டும், சாப்பிட வேண்டும் என்பது கூட மறந்து போகிறேன்.

நாம் சீரியல்களில் மூழ்கிவிட்டு, நம்மை சீரியல்கள் ஆக்ரமித்துவிட்டது என்று புலம்புகிறோம்.

நேற்று ஒரு நண்பர் என்னை காண வேண்டும், இந்த இட்த்தில் இருக்கிறேன் வருகிறாயா என்று கேட்க நானும் மிகவும் நிதானமாக நீ எவ்வளவு நேரம் அங்கு இருப்பாய் என்று கேட்டேன். அவ்ரோ இன்னும் அறை மணிக்கூறு இருப்பேன் என்றார். நான் என்னுடைய சீரியல் முடிய இன்னும் 15 நிமிடங்கள் இருப்பதால் வருவதற்கு 40 நிமிடம் பிடிக்கும் வேறொரு நாள் நாம் பார்க்கலாம் என்று கூறிவிட்டேன்.

அவரைக் காணாத்தால் எனக்கோ அல்லது அவருக்கோ எதுவும் நஷ்டமில்லை. அவரைச் சென்று பார்த்திருந்தால் என்னாகும் என்று யோசித்தேன். இரண்டு கிலோமீட்டர் நடை பயிற்சி கிடைத்திருக்கும். காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் (நம்ம அரசாங்க அலுவலர்களைப் போல் ) உட்கார்ந்த இடத்தை விட்டு நகருவது இல்லை. நம்முடைய வேலை அப்படி. எந்த நெருக்கடியான நிலையாக இருந்தாலும் உட்கார்ந்தே சிறிது சிந்திப்பது அல்லது இனைய தளத்தில் இருப்பது மட்டுமே. இப்படி இருக்க் கிடைத்த நடை பயிற்சிக்கான பொன்னான வாய்ப்பினை தவற விட்டதாகவே இருந்தது.

எதாவது மாற்றங்கள் செய்யவில்லை என்றால் என்னுள் எந்த மாற்றமும் இருக்காது  என்று எண்ணியதுடன் வேகமாக முடிவும் எடுத்தேன் சீரியல்களைப் பார்க்கும் நேரத்தில் நடை பயிற்சியில் ஈடுபடுவதும், மற்றும் எனக்குத் தேவையான சமையலைச் செய்து சாப்பிடவேண்டும் என்றும்… பார்ப்போம் என் எண்ணம் தின்னமாகிறதா இல்லை சீரியல்கள் என்னை வெல்கிறதா என்று காலம் தான் சொல்லவேண்டும் ?

Advertisements

அபுதாபியில் தீபாவளி

அபுதாபியில் தீபாவளி திருநாள்

பிறந்ததிலிருந்து சென்னையில் தீபாவளி பல கொண்டாடி இருக்கிறேன். தீபாவளியில் ஒன்றும் பெரிய விஷயமில்லை. எல்லா ஆண்டுகளும் விடியகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை உடுத்தி, மத்தாப்பு, பூவானம், சங்கு சக்கரம் என பல வகையான வான வேடிக்கைகளில் களித்து, தீபாவளி லேகியம் சாப்பிட்டு பாட்டி செய்து தரும் பல வகையான இனிப்புகளில் மைசூர் பாக்கையும், பைத்தமாவு உருண்டையும் ரசித்து சாப்பிட்டுவிட்டு, முள்ளு முறுக்கு, தேங்குழல் என்று நொறு வகைகளையும் ரசித்து பின்னர் விடிந்தவுடன் வெளிச்சத்தில் பட்டாசுகளை வெடித்து யார் வீட்டு வாசலில் நிறைய குப்பை இருக்கிறது(காசை கரியாக்குவதில்) என்று ஒரு போட்டியே நடக்கும். பட்டாசு வெடித்து களைத்தபின் சிறிது நேரத்தில் காலையில் சூடாக இட்லியோ, தோசையோ சட்டினி, சாம்பாருடன் ரசித்து பின்னர் தொலைக்காட்சி முன் உட்கார்ந்துவிட்டால் அடுத்த வேளை பசிக்கும் வரை அதை விட்டு நகருவதற்கு மனம் வராது.

எத்தனையோ ஆண்டுகள் வெளி ஊர்களில் இருந்து இருந்தாலும், பண்டிகை காலங்களில் விடுமுறைக்கு ( விடுமுறை எடுத்துக் கொண்டோ) வீட்டுக்கு ஓடி விடுவது வழக்கம். என் பாட்டியோடு பண்டிகைகள் கொண்டாடுவதில் இருக்கும் ஆனந்தம் எதிலும் இல்லை.

இந்த ஆண்டு நாடு விட்டு நாடு வந்ததால் விடுப்பு எடுத்துச் செல்லும் நிலையில் இல்லை. அடுத்து வரும் வாரத்தில் பக்ரித் பண்டிகை வர இருப்பதால் இங்கு ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும் என்பதால் அப்போது சென்னையில் இருக்கலாம் என்று திட்டம்.

இருப்பதோ அபுதாபி நகரம் (அரபு தேசம்). நம்ம ஊரில் ரம்ஜான், பக்ரித், மொஹ்ரம் என பல இஸ்லாமியர்களின் பண்டிகைகளுக்கு விடுமுறை இருப்பது பெருமையே. ஆனால் இந்த ஊரில் இந்தியர்களின் (இந்துக்களும்) எண்ணிக்கை குறைவு என்பதால் இந்துக்களின் எந்த பண்டிகைகளுக்கும் ஒரு அங்கீகாரமோ அல்லது அதைப் பற்றி யாருக்கும் தெரியாததாலோ நமக்கு விடுமுறை கிடையாது. தீபாவளி என்பது பண்டிகை என்றும் யாருக்கும் தெரிந்து இருக்கவும் நியாயம் இல்லை.

நல்ல வேளையாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விடுமுறை நாளான வெள்ளி கிழமையில் வந்ததால் சிரமம் இல்லாமல் போனது. என்னோட நண்பர் மஹேஷ் தன்னுடைய மனைவி, மகளுடன் அபுதாபியில் இருப்பதால் அவர்கள் வீட்டில் இந்த ஆண்டு பண்டிகையை கொண்டாடுவது என்று முடிவு செய்து இருந்தேன். அதற்காக பல மாதங்கள் முன்னரே அவர்களிடமும் கூறியிருந்தேன்.

தீபாவளிக்கு முன்னர் அலுவல் நிமித்தமாக மூன்று நாட்கள் துபாயில் இருக்க நேர்ந்த்து.

முன்னரே மஹேஷிடம் பேசியிருந்ததால், தீபாவளிக்கு முன் தினமே அவரது இல்லத்திற்கு வருவதாகவும் கூறியிருந்தேன். தீபாவளிக்கு முன் தினம் வெங்காய சாம்பாரும், பஜ்ஜியும், உருளை கிழங்கும் இரவு உணவு என்று நினைவு படுத்தி சாப்பிட வரவும் என்றும் சொல்லி இருந்தார்.

துபாயில் பணியை முடித்து அபுதாபிக்கு மதியமே புறப்பட வேண்டும் என்று என் அலுவலகத்தில் சொல்லியிருந்தேன். இருந்தாலும் அலுவல் நிமித்தமான சந்திப்புகள் முடியவே ஐந்து மணி ஆனாது. அதற்கு பின்னர் நான் கிளம்பி அபுதாபி வரும்போது மணி ஒன்பதை நெருங்கியது. வரும் வழியிலேயே மஹேஷின் அலைபேசியில் அழைத்து இப்போது தான் துபாயில் இருந்து வருகிறேன், சிறிது தாமதமாக வருவேன், கண்டிப்பாக வந்துவிடுவேன் என்று சொல்லி இருந்தேன்.

நான் தங்கி இருக்கும் அறைக்கு வந்து, புது துணிகளை எடுத்துக் கொண்டு கிளம்பு முன்னரே, மஹேஷின் மனைவியும் எனது தோழியிடமிருந்து அழைப்பு வந்தது. சமையல் முடிந்து சூடாக இருக்கிறது, உடனே வரவும் உனக்காக காத்திருக்கிறோம் என்று சொன்னாள். அதற்கு மேலும் தாமதமாக்காமல் சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதால் உடனே கிளம்பி அவள் வீட்டிற்க்கு சென்றேன். இரவு உணவு சாப்பிடும் போது என் பாட்டியை நினைத்துக் கொண்டே சாப்பிட்டேன்.

எத்தனை பேருக்கு பஜ்ஜி செய்வாள், அதுவும் களைப்பே சிறிதும் இல்லாமல் எப்படி என்றும் தெரியாது…

பஜ்ஜி மட்டுமில்லை, சாம்பாரும் உருளையும் கூட சூப்பர். நன்றாக சாப்பிட்டோம், சாப்பிடும் போது அவளிடம் சொன்னேன், சீக்கிரம் வந்து இங்கு கடைக்குச் சென்று ஒரு புடவையோ அல்லது சல்வாரோ வாங்க வேண்டும் என்று திட்டமிட்டேன் ஆனால் தாமதமானதால் எதுவும் முடியவில்லை என்று.

இப்போது மணி பதினொன்றை தொட, கடை எல்லாம் அடைத்து விடுவார்கள் என்றேன் அவளோ வா, பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு போய் பார்க்கலாம் என்று சொல்ல அவளுடன் அவளது மகளும், அவரது தோழி, நான் என நால்வர் படை கடைக்கு கிளம்பினோம். இரண்டு கடைகள் சென்றோம், எனது விருப்பதிற்கு ஏற்றார் போல எதுவும் கிடைக்கவில்லை. சரி இந்த ஆண்டு ஜீன்ஸும், சட்டையும் தான் தீபாவளி புத்தாடை என்று நினைத்தேன். ஒரு குர்த்தா கிடைத்தால் கூட பரவாயில்லை என்று மேலும் ஒரு கடைக்கு செல்ல அங்கு ஒரு விதமான சட்டை என்று தான் சொல்ல வேண்டும் ஆயினும் கொஞ்சம் அலுவலக சட்டையில் இருந்து வித்தியாசமாக இருந்தது.

நாங்கள் வீடு வந்து சேரும் போது மணி 12 ஆனாது. அதன் பின்னர் தூங்கி காலையில் எழ வேண்டுமே என்ற கவலை. என் தோழியோ நீ நல்லா தூங்கு, காலையில் எல்லாம் ஆயத்தம் செய்து உன்னை எழுப்புகிறேன் என்றாள்.

நான்கு மணி நேரம் தூங்கி இருப்பாள் என்று நினைக்கிறேன், காலையில் நான் கண் விழிக்கும் நேரம் அவள் குளித்து புது புடவையில் தீபாவளி வாழ்த்தோடு எழுப்பினாள். அழகாக சம்பிரதாய முறைப் படி, சாமி படத்திற்கு முன்னர், காய்ச்சிய நல்லெண்ணையும்,  புதிதாக வாங்கிய துணிகளை சந்தன குங்குமம் வைத்து அடுக்கி இருந்தாள்.

அம்மா உன்னை நினைத்துக் கொண்டே எனக்கு நானே சந்தன குங்குமம் வைத்துக் கொண்டு, தலைக்கும் நல்லெண்ணை வைத்துக் கொண்டேன். பின்னர் குளித்து புது துணி உடுத்தினேன்.

தீபாவளியின் ஸ்பெஷல் லேகியம் சிறிது அம்மாவிடம் முகத்தை சுளித்து கடனே என்று சிறிய மிளகு அளவு சாப்பிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை நல்ல வெள்ளச் சீடை அளவில் மஹேஷ் கொண்டு வந்து கொடுக்க சிறிதும் முகம் சுளிக்காமல் அப்படியே வாயில் தினித்தேன். மிகவும் ருசியாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். கூடவே ஒரு காஜுகட்லியும் கொடுக்க அதையும் வாயில் தினித்தேன்.

பின்னர் அம்மாவுக்கு அலைபேசியில் தீபாவளி வாழ்த்துச் சொல்ல அழைத்தேன். மிகவும் சந்தோசமாக இருந்தது. அம்மாவிடம் பேசியபின் நட்புக்களின் அழைப்புகளுக்கும் செவி மடுத்து, பேசிக் கொண்டிருக்கும் வேளையில் சிற்றுண்டியை கையில் தினித்தாள் என் தோழி. சூடான பூ போன்ற இட்லியுடன் சாம்பாரும், சட்னியும் பேசிக் கொண்டே சாப்பிட தீபாவளி சிறப்பாக ஆரம்பித்த்து.

கிருஷ்ணா ஸ்வீட்ஸில் வாங்கிய மைசூர்பாக், பாதுஷா, காஜு கட்லி, முறுக்கு, ரிப்பன் பகோடா, மிக்சர், மற்றும் வீட்டில் தயாரித்த குலாப் ஜாமூன் பட்டாசுகளின் சத்தமின்றி, மத்தாப்புகளின் தீப்பொறியின்றி என தீபாவளி அமர்க்களமாக முடிந்தது. பட்டாசு விடும் ஆசையும் பல ஆண்டுகளாக இல்லாததால், தீபாவளி அமைதியாக எந்தவித குறையுமின்றி இனிதே முடிந்தது.

என் வீட்டில் இருந்து இருந்தால் இதே முறையில் தான் கொண்டாடி இருப்பேன். சிறிதும் கவலை இன்றி இந்த தீபாவளியை சிறப்பாகவும் எந்த குறையும் இல்லாமல் எனக்கு தந்த மஹேஷ் குடும்பத்திற்க்கு  நன்றி கூற மிகவும் கடமைபட்டு இருக்கிறேன்.