உன்னை மறந்தேனா?

அன்பான உறவே பாட்டி என்பது எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ! ! !

பாட்டி உன்னோடு மேலும் ஒரு நாள் வேண்டும் கிடைக்குமா???

உன்னுடைய ஒரு நாள் உன்னோடு இல்லாது, உன்னை நினையாது இருந்த உன் மனதிற்கு இனிய இந்த பேத்தியை மன்னித்துவிடு. எனக்காகவே வாழ்ந்த ஒரு ஜீவன் என்னை விட்டு பிரிந்தவுடன் மறக்கவில்லை ஆனால் நீ என்னை விட்டு வின்னில் பறந்ததை மறந்தேன்.

இன்று என் இதயத்தைத் தைத்த விஷயம் என் பாட்டி – இறந்து இன்று ஒரு வருடம் ஆகிவிட்டதாமே… அய்யோ என்றிருந்தது, எப்படி சென்றது இந்த ஒரு ஆண்டு என்றே தெரியவில்லை என்பது ஒரு புறம் என்றால் நான் இந்த நாளை எப்படி மறந்தேன் என்பது??

அவள் உயிருடன் இருந்த காலத்தில் சிறிது உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும், நான் பக்கத்தில் இருக்கும்போது செத்துப்போய்விடாதே. நான் கண் காணாத தூரம் சென்றவுடன் செத்து போ என்று எத்தனையோ முறை கூறி இருக்கிறேன். ஆனாலும் நான் பக்கத்தில் இருக்கும்போதே உன் உயிர் பிரிந்தது.

எப்போதும் போல் என் சுடுச் சொல் கேட்டே சென்றது. என்னுடைய சுடு சொல்லுக்கு பின் இருக்கும் அன்பின் ஆழத்தை அறிந்தவள் நீ மட்டுமே. அதுபோலவே உன் மகள் என் சித்தியின் சொல்லில் இருக்கும் அன்பின் ஆழத்தை அறிந்தவள் நான் மட்டுமே என்பது மட்டுமே ஆறுதலான விஷயம்.

உனக்கு எப்படியோ அது ஆத்ம திருப்தியை தந்திருக்கும். ஆனால் எனக்கு நான் சாகும் வரை என்னைக் கொன்று விடுமே. ஆம் என்னை தன் கண்ணுக்குள் வைத்து வளர்த்த என் அன்பு ஜீவன் என் கண் முன்னால் உயிர் பிரியாமல் தவிக்கும் வேதனையைக் காண முடியாமல் மட்டுமே நான் உன்னை செத்துபோ பாட்டி என்று சொன்னேன். நான் சொன்ன சில மணி நேரங்களில் நீ போய்விடுவாய் என்று எனக்கு தெரியாதே.. நான் அழுதால் தாங்க முடியாதே அதனால் போய்விட்டாயோ?

ஒரு முறை உடல் நலகுறைவால் இருந்த உன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நேரிட்டது அது என் பாக்கியம் என நினைத்தேன் நீ பிழைத்துக் கொண்டதால். அந்த மருத்துவமனையில் உன்னைச் சேர்த்தவுடன், மிகவும் சிரம படுகிறாள் என்னுடைய பாட்டி. பூவினைப் போன்றவள் இப்படி கஷ்டபடக் கூடாது. உங்களிடம் அவளைக் காப்பாற்றித் தரமுடியாது என்றால், அவள் அமைதியாக, சிரமங்கள் எதுவுமின்றி இறக்க வழிச் செய்யுங்கள் என்றேக் கேட்டேன்.

நீ அன்று பிழைத்தவுடன் அந்த மருத்துவர் உன்னிடம் பாட்டிமா உங்க பேத்தி உங்க மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்காங்கனு நான் சொன்னதை உன்னிடம் சொல்லும்போது எவ்வளவு சந்தோசம் கொண்டேனோ அதைப் போல் ஒராயிரம் மடங்கு வேதனைக் கொண்டேன், உனது கடைசி நேரங்களில் நீ பட்ட இன்னல்களை நினைத்தால் இன்றும் இதயம் பதறுகிறது. வேண்டாமடா இறைவா இனி ஒருவருக்கும் இந்த மரண வேதனை.

எத்தனை அன்பு பாட்டி உனக்கு என்மீது, என் முகம் சிறிது வாடினாலோ, என் கண்ணில் இருந்து சிறிது நீர் வந்தாலும்கூட கலங்கிவிடுமே உன் மனது. எனக்காக நீ பெற்ற மகளிடம் எப்படியெல்லாம் சண்டையிடுவாய். உன் மகளை நாங்கள் பாடாதபாடு படுத்திய போதும் எங்களுக்காக அன்பும், அக்கறையும் கொண்டு உன் மகள்களுடன் சண்டையிடுவாயே எப்போது கிடைக்கும் அந்த சுகம். என் மகள்கள் போல வருமா என்று எங்களுடன் சண்டை போடும் உரிமை உனக்கு மட்டுமே தானே.

பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்றாலும் அது அடுத்தவர் வீட்டில் நடக்கும் வரைதான். நம் வீட்டில் இறப்பு என்றால் அதைத் தாங்கிக் கொள்வது என்பது எப்படி பட்ட கஷ்டம் என்பதனை எனக்கு உணர்த்தியது என் பாட்டியின் மரணம். அப்படி தான் இருந்தது சென்ற ஆண்டு. உன் சிதைக்குக் கொள்ளி வைத்த மகனுக்கு எந்த அளவுக்கு வருத்தமோ, அதைவிட சிறிது அதிகமாகவே எனக்கு இருந்தது.

உன் மகனைக் காட்டிலும் உன்னோடு உன் கஷ்டங்களை அதிகமாக கண்டவர்கள் மட்டுமில்லை அதில் பங்கு கொண்டவர்கள் என்பது நாங்கள் மட்டும் தான்.

நீ இறந்ததில் எனக்கு வருத்தமில்லை வாழ்ந்து முடித்து, பேரன் பேத்திகளை எடுத்து அவர்களின் திருமணம் வைபவம் என்று எல்லாம் பார்த்தாகிவிட்டது. ஆனால் இந்த உலகில் தனக்கென்று வாழாது, அடுத்தவரின் நலனுக்காக வாழ்ந்தவர் என்று உன்னை பெருமையாக சொல்லிட நினைத்தாலும், உனக்கு என்ன வேண்டும் என்று கூட தெரியாதவளாய், உன் மக்களுக்கு அம்மாவாகவும், எங்களுக்கு பாட்டியாகவும் மட்டுமே கடைசி வரை இருந்தும் இறந்தும் போனாயே என்று உன்னை நினைக்கையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

உன்னிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு இருக்க வேண்டும் நீ சமைக்கும் சமையலை நன்றாக சாப்பிடுவதைத் தவிர வேறு எதையுமே கற்றுக் கொள்ள முடியவில்லை. உன் சமையலைக் கற்றிருந்தால் இந்த உலகையே எங்கள் கைகளுக்குள் கட்டிப் போட்டிருக்கலாம்.

எங்களுக்காக அருமையாக சமையல் செய்வாயே, எதைச் செய்தாலும் உப்பும் உரப்பும் எங்களுக்குத் தேவைக்கு ஏற்றார் போலவே இருக்குமே.. அதுவும் நீ செய்யும் தக்காளி சாதம் இனி இந்த உலகினில் எப்போதுமே எனக்கு கிட்டாத அமிர்தம் தான். உன்னோடு போனது உன் உயிர் மட்டுமல்ல எங்கள் ரசனையும் தான்… ஆம் சாப்பிடும் ரசனைதான்… நாங்கள் சாப்பிடும் அழகை ரசிக்கவும் வேறு யாரும் இல்லையே… நல்லா சாப்பிடு சாப்பிடு என்று தட்டு நிறைய போடுவதற்கு தைரியமும் யாருக்கும் இல்லையே.

நீ அழகாக ஹிந்தி பேசும் விதமே அந்த ஹிந்தி என்ற பாஷையை எங்களுக்கு அறிமுகம் செய்ததோ? எப்படியோ எங்களுக்குப் புரிய கூடாது என்பதற்காக நீயும் உன் மகள்களும் பேசும் சில வார்த்தைகளையே அறிந்து இருந்தாலும் நீயே காரணமாக இருந்து இருக்கிறாய்.

உன்னுடைய நட்பு வட்டம் மிகவும் சிறிது ஆனால் மிகவும் இறுக்கமானது என்பதற்கு சாட்சியே நம் வீட்டில் இன்றும் இருக்கு புனித அந்தோனியாரின் படம், நம் வீட்டிலிருக்கும் சுவாமி படங்களுடன் இருந்து வருவது. யார் அதைக் கொடுத்தார்கள் என்பது தெரியாது ஆனால் உனக்கு வரிசையாக பிறந்த பிள்ளைகள் அனைத்தும் தவறிட, இன்று எங்களுக்கு மாமாவாக இருந்து வரும் உன் பிள்ளை பிழைத்து உன்னுடைய இறுதிவரை இருக்கவே அந்த படத்தை உனக்கு யாரோ கொடுத்தாகச் சொல்லி இருக்கிறாய். அப்போது கேலி பேசி இருக்கிறேன் எட்டாவது பிள்ளைக்கு கோபால் என்று பெயர் வைத்து இருந்ததற்கு பதில் அந்தோனி என்று அல்லவா நீ பெயர் வைத்து இருக்கவேண்டும் என்று. ஆனால் நீ போன பின் உன் நட்பின் ஆழத்தை உண்ர்கிறேன் பாட்டி.

உன்னிடம் இருந்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் – விருந்தோம்பல். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது பாட்டி. உன்னோடு வாழ்ந்தேன் என்று பெருமை தான் இருக்கிறது ஆனால் உன் வளர்ப்பில் இருந்து எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. கையில் காசில்லா காலாத்திலும், வீட்டில் அரிசி இல்லா நேரத்திலும், வீட்டில் இருந்த வெண்கலப் பாத்திரங்களை அடமானம் வைத்து, நீ உன் சொந்த பந்தங்களுக்காக செய்த விருந்தோம்பலை நான் கண்டதில்லை. ஆனால் கேட்டிருந்தும் எங்களுக்கு இன்று வரை இல்லை அந்த நல்ல பண்பு.

எனக்கு விருந்தோம்பலில் ஒரு வெறுப்பு உண்டாவதற்கு காரணமே நீ தானோ? உன்னிடம் செய்து கொண்டவர்கள் யாரும் உன்னை திரும்பிக்கூட பார்க்கவில்லையே என்பதனாலோ?

எப்படி பாட்டி நாற்பதுகளில் கணவனை இழந்து, பத்து வயது மகனும், திருமண வயதில் ஒரு மகளும் இருக்க என்ன செய்வோம் என்று எப்போதவது யோசித்து இருக்கிறாயா? எப்படி நீ இத்தனை ஆண்டுகள் தனியாக இருந்தாயோ?  எந்த ஒரு சிறிய வேலையும் செய்ய யாருமில்லாமல், உலக அறிவு சிறிதளவே இருந்த போதும் எப்படி சமாளித்து வந்தாயோ என்று நினைக்கும்போது எனக்கு கர்வமாக இருக்கிறது உன்னை நினைத்து. உன்னிடமிருந்து தான் தனியாக வாழ கற்றுக் கொண்டேனோ? இன்று நான் தனியாக இருப்பது என்பது ஒரு பெரிய விஷயமாக இப்போது தோன்றவே இல்லை.

உன்னிடம் இருக்கும் பொறுமையில் ஒரே ஒரு சதவிகதம் இருந்திருந்தால் நான் இன்னமும் நன்றாக இருந்திருப்பேனோ. நீ இருந்தவரை உன்னுடைய பொறுமை எனக்கு என்ன மடத்தனமாக இருக்கிறது என்று நினைத்தேன். இன்று நீ இல்லாமல் உன்னை நினைக்கையில் உன் பொறுமையால் மட்டுமே இந்த மாதிரி பேத்தியுடனும் நல்லுறவுடன் இருந்திருக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கையில் எனக்கிருக்கும் பாசம் உன் மேல் ஒரு படி உயருகிறது.

உன்னை வருடத்திற்கு ஒரு முறை உனக்காக ஸ்ரார்தம் பண்ணி உன்னை நினைத்தால் போதுமா என்று என் மண்டையில் ஒரு நெத்தியடி என்ன செய்வது பாட்டி??

தாத்தாவின் ஸ்ரார்தத்திற்கு நான் எங்கு இருந்தாலும் வருமாறு சொல்வாயே, இன்று உனக்கும் நடக்கிறது பாட்டி, என்னிடம் சொல்வதற்கு தான் ஆளில்லை. நீ இல்லாத்தால் அனைத்து உறவுகளும் அன்னியமாகக் காண்கிறோம் பாட்டி. தாத்தாவிற்கும் நடந்து இருக்குமே என்று இப்போதுதான் நினைவிற்கே வருகிறது.

அட்சதை எடுத்து வைத்து நான் வரும்போது போடுவாயே பாட்டி, இன்று உன்னுடையதும் நானின்றி முடிந்தது. எனக்கான அட்சதை யார் எடுத்து வைப்பார்களோ?

உன்னிடமிருந்து பல ஆண்டுகளாக பண்டிகைகளுக்கு நமஸ்காரம் செய்யாமல் காசு வாங்கி இருக்கிறேன். நீ இறந்தவுடன் செய்தேனே கடைசி நமஸ்காரம் எப்படி சொல்வேன் என்ன செய்வேன் பாட்டி என் மனம்படும் பாடு. இனியும் நான் யாருக்கேனும் நமஸ்கரித்தால் நீ மட்டுமே என் மனதில் வருவாய்.

உன்னை தினமும் நினைக்க முடியும் ஆனால் பேச முடியாது. உன் நினைவுகளோடு வாழ பழகி விட்டோம். இப்படி தான் தாத்தா இல்லாமல் நீயும் அவரின் நினைவுகளோடு வாழ்ந்தாயோ என்று இந்த தருணத்தில் எண்ணத் தோன்றுகிறது.

தனி மனுஷியாக இருந்து நீ எங்களுக்காக கொண்டாடிய நவராத்திரி பண்டிகையும், தீபாவளியும், பொங்கல் என அனைத்து பண்டிகைகளும் வருமே ஆனால் நீ இன்றி எப்படி என்று நினைக்கவில்லை. உன்னை நினைக்காமல் எப்படி இருக்க முடியும். உன்னால் அன்றோ அந்த பண்டிகைகள் எனக்கு பரிச்சயமாயின.

ஆம்… உன்னை மாதிரியே எனக்கும் என்ன வேண்டும் என்று எனக்கும் தெரியலை. அது எதனால் என்றால் நீ இருந்தவரை எனக்கு தேவை என்ன என்பதனை என் தாய்க்கு இனையாக அவளோடு சேர்ந்து எனக்காக நீ இருந்ததால். இதோ நீ போய்விட்டாய் இன்றும் எனக்கு என்ன வேண்டும் என்று அறியாமல், திக்குத் தெரியாமல் ஏதோ நானும் வாழ்கிறேன் உன்னைப் போலவே ஆனால் சில பல வித்தியாசங்களுடன்….

உனக்கும் எனக்குமான உறவினை இந்த பதிவினில் ஒரு பதிவாக போட நினைக்கவில்லை. உன்னை நான் மறந்தேன் என்று நீ நினைத்துவிட கூடாது என்பதறகாகவே இந்த பதிவு.

நீ இருந்து சொல்ல வேண்டிய அனைத்தையும் நீ இறந்தபின் போதனைகளாக எடுத்துக் கொண்டுள்ளேன் அதுவே இந்த பதிவிற்கான அவசியம் வந்தது…

என்னோட இந்த பதிவை நீ படிக்க உனக்கு ஒரு கடிதம் எழுதவா, இமெயில் அனுப்பத் தெரியாது ஆனால் இமெயில் பற்றி தெரியும் அதனால் இறைவா என் பாட்டியிடம் சொல் அவளுக்காக ஒரு கடிதம் வந்து இருக்கிறது என்று.

பாட்டிமா அன்போட உன் உன் பேத்தி எழுதும் பதிவு…..

உனக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தபோதும், நீயும் நானும் காலத்தின் கட்டாயத்தால் பிரிந்து வாழ்ந்த காலங்களில் நான் எழுதியது தங்கிலிஷ் கடிதங்களே.  கடவுளின் அனுகிரகத்தால் இந்த பதிவினை நான் தமிழில் எழுதிகிறேன் நீ படிக்கவே போலும்….

இந்த பதிவினை படித்த பின் எனக்காக நீ தருவாய் என்றென்றும் உன் அன்பும் ஆசிர்வாதங்களையும்….

என் ஆயுளின் இறுதிவரை வேண்டும் உந்தன் அன்பு இந்த பதிவாக

Advertisements

6 thoughts on “உன்னை மறந்தேனா?

 1. Very nice and touching blog. I agree that we miss patti’s thakkali sadam and her care about us. But this blog seems to be length and also its very touching one. Anyway its good…

 2. dear uma its excelent but this blog make my father remmebrance and my eyes full of tears here after dont send me this type of blog links i cant read it full …..

  • மச்சான்,

   இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு விஷயம் தான்.

   பிறப்பும் நம் கையில் இல்லை,
   இறப்பும் நம் கையில் இல்லை….

   அதற்கு இடையில் எத்தனை நேசத்த்தோடும்,
   புரிதலுடனும் வாழ்கிறோம் என்பதற்கான சான்றே இந்த பதிவு.

 3. அருமை..அழகா எழுதி இருக்கீங்க…எனக்கும் என் பாட்டி ஞாபகம் வந்துடுச்சி..மன்னிக்க..எங்க ஆயா ஞாபகம்..அப்டிதான் கூப்பிடுவேன்..இன்னும் இருக்காங்க…

  • இருக்கும் போது அவர்களுடன் அவர்களின் அருமை அறிந்து வாழ்வது மிகச் சிறப்பாகும்.
   சென்ற பின் இப்படி அவர்களுடன் வாழ்ந்த ஓட்டத்தை நினைத்து வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பமாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s